மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஒத்தக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கி.மீ. தூரத்துக்கு 26 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய், நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஏற்கெனவே நடைபெற்றது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் குறித்த முதல்கட்ட ஆயத்தப் பணி குறித்து ஒத்தக்கடை பகுதியில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். மாநகராட்சி ஆணையர் சித்ரா, மேலூர் கோட்டாட்சியர் கார்த்திகேயனி, நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.