சென்னை: அரசு பேருந்துகளுக்கான குறிப்பேடுகளை ஆங்கிலத்தில் வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பேருந்து வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேடு, பணியைத் தொடங்கும்போது ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த குறிப்பேடு இதுநாள் வரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சில பணிமனைகளில் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து பணிக்கு வருவோருக்கு இதுபோல வழங்குவது ஏற்புடையதல்ல எனக் கூறி, அதிகாரிகளிடம் ஊழியர்கள் சில இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் அளித்த விளக்கத்தில், “பணிமனைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் குறிப்பேடு உருவாக்கப்பட்டது. தற்போது முழுமையாக தமிழில் மட்டுமே வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கிலத்தில் குறிப்பேடு வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் 1956-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும். பேருந்துகளுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது கண்டிக்கத்தக்கது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாகக் கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே தாய் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும்
வாகனக் குறிப்பேடுகளைக்கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும், அதன் முதல்வரும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது ஏமாற்றும் செயலாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.