`ரஜினி சாரிடம் எங்க அப்பா சொன்ன வார்த்தை..!' – ஜெயம், எம்.குமரன் ரீரிலீஸ் பற்றி இயக்குநர் மோகன் ராஜா

‘ஜெயம்’, ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரீரிலீஸ்

ரவி மோகன் அறிமுகமான ‘ஜெயம்’, ”எம் குமரன் s/o மகாலட்சுமி’ படங்கள் இப்போது ரீரிலீஸ் ஆக உள்ளன. எடிட்டர் மோகன் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயம்’. அதைப் போல 2004-ல் ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ படமும் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது புத்தம் புது பொலிவாக 4 கே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 5.1 அட்மாஸ் ஒலியமைப்பில் வெளிவருகிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்த இயக்குநர் மோகன் ராஜாவிடம் பேசினோம்.

ஜெயம்

” இன்னிக்கு டிரெண்ட் நல்லா இருக்குது. பாடல்கள் நல்லா அமைந்த படங்களை வரவேற்கிறாங்க. ‘ஜெயம்’, ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரெண்டுமே மியூசிக்கல் ஹிட். ரீரிலிஸ் என்பதும், இளைஞர்கள் கொண்டாடக்கூடிய டிரெண்ட் ஆகவும் இருக்குது. ‘ஜெயமு’ம் சரி, ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’யும் சரி ரெண்டையும் ரசிகர்கள் இன்னிக்கும் கொண்டாடுறாங்க. ரவியோட முதல் படமாக ‘எம்.குமர’னையே கொண்டு வந்திருக்கலாம். அதில் நடிக்கக் கூடிய தகுதி ரவிக்கு இருந்தாலும் கூட ‘ஜெயம்’ படத்தை தான் கொண்டு முதல் படமாக கொண்டு வர விரும்பினோம். ‘ஜெயம்’ மாதிரி அப்பாவித்தனமான காதல் கதைதான் ரவியை ஆடியன்ஸ்கிட்ட கொண்டு சேர்க்கும்னு எண்ணினோம். அந்தபடத்தில் எல்லோருமே புதுமுகங்கள் போலத்தான்.

ரவி, சதா

எனக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு என எல்லோருக்குமே மறக்க முடியாத படமாக ‘ஜெயம்’ இருக்குது. ரொம்ப வருஷமாக தயாரிப்புக்கு இடைவெளி விட்டிருந்த அப்பா, ‘ஜெயம்’ மூலம் தான் மறுபடியும் தயாரிப்பை கையில் எடுத்தார். ஹீரோவாக ரவி புதுமுகம் தான். நானும் அறிமுக இயக்குநர். ஆனால் ‘ஜெயம்’ படத்துக்கு அப்பா செலவு பண்ணினதை நினைச்சா, இப்பவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு டிரெயினையே பத்து நாட்கள் வாடகைக்கு எடுத்திருந்து, காட்சிகளை எடுக்க வச்சார்.

மோகன்ராஜா – ஜெயரம் ரவி

`ரஜினி சார் ஆச்சரியமாக சொன்னார்’

ஏன்னா , டிரெயினை ஒரு நாள் வாடகைக்கு எடுத்தாலே, அவ்வளவு பெரிய செலவு அது. நாங்க பத்து நாட்கள் வாடைக்கு எடுத்திருந்தோம். ‘ஜெயம்’ படத்தை ரிலீஸுக்கு முன்னாடியே ரஜினி சார் பார்த்துட்டு டிரெயின் காட்சிகளை பாராட்டினார். ‘எப்படி இவ்வளவு செலவு செய்தீங்க. புதுமுகங்கள் நடித்த படத்துக்கு இப்படி யாரும் செலவு செய்ய மாட்டாங்க’னு அப்பாகிட்ட ரஜினி சார் ஆச்சரியமாக சொன்னார். அதற்கு அப்பா சொன்ன வார்த்தை இப்பவும் ஞாபகத்துல இருக்குது. ‘இது என் புள்ளைங்களோட வருங்காலத்துக்காக நான் பண்ணியிருக்கற செலவு’ன்னாங்க. அதைபோல ரவியை ரிஸ்கான காட்சிகள்ல நடிக்க வச்சேன்.

‘கவிதையே தெரியுமா’ பாட்டுக்கு 9 நாட்கள் ரவி கயிறு கட்டி, நடிச்சார். அந்த காலகட்டத்துல ரோப் கட்டி காட்சிகள் எடுக்கறது அரிது. அதுல சதா ரோப் கட்டியிருக்க மாட்டாங்க. ரவி, தன்னோட கால்களாலேயே சதாவை தூக்கி, சதாவின் எடையையும் அந்தரத்தில் தாங்கியபடி நடிச்சார். அந்த சீன்ல கயிறு கட்டினதுல ரவியோட உடம்பு முழுவதும் ரணமாகிடுச்சு.” என்ற மோகன் ராஜா, ‘எம்.குமரன்’ நினைவுகளையும் பகிர்கிறார்.

நதியா, ரவி மோகன்

’25 நாட்கள் எக்ஸ்ட்ரா ஓடும்டா’

”இந்த படத்தின் கதை தேர்வின் போது அம்மாவாக நதியா நடிக்கிறாங்க என்ற பேச்சு கிளம்பியதும், அப்பா என்கிட்ட சொன்ன வார்த்தை ’25 நாட்கள் எக்ஸ்ட்ரா ஓடும்டா’னு சொன்னாங்க. அப்புறம் பாடல்களை எடிட் செய்து முடித்ததும், அப்பாகிட்ட போட்டுக் காட்டினேன். பாடல்களை அவர் பார்த்துட்டு, ‘இன்னும் 25 நாட்கள் எக்ஸ்ட்ரா ஓடும்டா’னு மறுபடியும் சொன்னார். அந்த படங்கள்ல அவ்வளவு வேல்யூ இருந்தது. ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ மாதிரி கமர்ஷியல் பேக்கேஜ் அமையறது ரொம்ப அரிது.

இந்த படத்துல ரவி, நதியா, பிரகாஷ்ராஜ், அஸின், விவேக் சார்னு அருமையான நடிகர்கள் தேர்வு இருந்தது. சிலர் நதியாவை பார்த்துட்டு, ‘அம்மா கதாபாத்திரம்னா தலை நரைச்சிருக்கணுமே. ஆனா, நீங்க தலை நரைக்காமல் காட்டியிருக்கீங்க’னு சிலர் குறையாக சொன்னாங்க. ஆனால் படம் வெளியானதும் ஒரு ஆங்கில நாளிதழின் விமர்சனத்தில் ‘அம்மா கேரக்டரை நரைமுடியோடு காண்பிக்காமல், இயல்பான அம்மாவாக காட்டியிருக்கிறார்கள்’னு பாராட்டி எழுதியிருந்தாங்க.

ரவி மோகன்
ரவி மோகன்

சென்டிமென்ட்களை உடைத்த படம்

‘எம்.குமரன்..’ படத்தை பொறுத்தவரை, சென்டிமென்ட்களை உடைத்த படம்னு கூட சொல்லலாம். ‘பாக்ஸிங் கதைகள் ஓடினதில்லை. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தினால் ஓடாது’ என்றெல்லாம் சென்டிமென்ட் இருக்குதுனு சொன்னாங்க. ஆனா, ‘கதை சரியாக இருந்தால், சென்டிமென்ட் பொருட்படுத்த வேண்டாம் என்று உணர்த்திய படம். இன்னொரு விஷயம். 20 வருஷம் கழித்து ஒரு அபூர்வத்தை உணர்ந்தேன். இந்த படத்தை அப்பொழுது குடும்பம் குடும்பமாக பார்த்தாங்க. தெரியும். ஆனா, சமீபகாலத்துல சிங்கிள் பேரன்ட்ஸ் நிறைய பேர் என்னை பார்க்கும் போது, ‘எம்.குமரன்’ எங்களுக்கு ரொம்ப உத்வேகமா இருந்தது.

தனிமையில் இருக்கோம். எங்களால குழந்தைகளை வளர்க்க முடியுமானு ஒரு பயமும் தயக்கும் இருந்த போது, அந்த பயத்தை போக்கி தைரியம் கொடுத்த படமாக ‘எம்.குமரன்’ இருந்தது அந்த அம்மாக்கள் நெகிழ்ந்து சொன்னாங்க. ‘எங்க பசங்ககிட்ட இந்த படம் பார்த்துதான் உங்களை வளர்த்தோம்’னு இருபது வருஷத்துக்கு பிறகு சொல்லியிருக்கோம்”னு சொன்னாங்க.

மோகன் ராஜாவுடன்..

இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கு கொடுக்கக்கூடிய கிஃப்ட் ஆக, ‘எம்.குமரன்’ இருக்கும்னு சொல்லிக்க விரும்புறேன். இளைஞர்கள் கும்மாளம் போடக்கூடிய படங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும். ஆனா, இளைஞர்கள் நீங்க உங்க தாயையோ, பெற்றோரையோ அழைத்து வந்து காண்பிக்கும் படமாக ‘எம்.குமரன்’ இருக்கும். இளைஞர்கள் தங்களோட பெற்றோர்களையும் ‘எம்.குமரன்’ படத்துக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கறேன்!” என்கிறார் மோகன் ராஜா.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.