கலவரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 104 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்போக்பி, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தவுபால், இம்பால் மேற்கு மற்றும் காக் சிங் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 104 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆயுதங்களை திரும்ப கொடுத்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த 20-ம் தேதி கூறுகையில், “ மக்கள் தங்களிடம் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை 7 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டது” என்று உறுதியளித்தார்.
ஆனால், ஏழு நாட்களுக்கு பிறகு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலர் பிகே சிங் எச்சரித்திருந்தார். இந்தநிலையில்தான் தற்போது காவல் துறையினரிடம் மணிப்பூர் மக்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைத்து வருகின்றனர்.