ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில், அரசு ஒர் அணை கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய அனுமதி 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம். ’நீங்க என்ன அணை கட்டுறது; நான் கட்டுறேன் பாருங்கடா’ என்கிற ரேஞ்சில், பல நீர் எலிகள் ஒன்று சேர்ந்து அணை கட்டிவிட்டிருக்கிறது. இதனால், செக் குடியரசுக்கு 1.2 மில்லியன் டாலர் சேமிப்பாகி விட்டதாம்.

நீர் எலிகள், ஆங்கிலத்தில் பீவர்கள் (beavers) என்று அழைக்கப்படும். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் காணப்படுகின்றன. நீர் எலிகள் தங்கள் வாழ்நாள் முழுக்க வளரும். முதிர்ச்சியடைந்த நீர் எலிகள், சுமார் 25 கிலோ வரை எடையிருக்கும். நீர் எலிகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை கூட்டமாக வாழும் விலங்கு. நீர் எலிகளுக்கு பெரிய கூர்மையான முன் பற்கள் இருக்கும். இதன் மூலம், மரங்களை கடித்து துண்டாக்கும். இந்த மரக்கட்டைகள், மண், கற்களை தண்ணீருக்குள் குவியல் குவியலாகப் போட்டு, ஆற்றில் அணை கட்டி தங்களுக்கான இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளும்.
நீர் எலிகளின் இந்த அணைகள் மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும், நீரை சுத்தம் செய்யும், சில நேரங்களில் காட்டுத்தீயையும் தடுக்க உதவும். அமெரிக்காவில் ஓர் இடத்தில், அரசு கட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தைவிட இந்த நீர் எலிகள் கட்டிய அணை, நீரை இன்னும் நன்றாக சுத்தம் செய்ததாம்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் நீர் எலிகள் அதிகமாக இருந்தன. ஆனால், அவற்றின் உரோமத்துக்காக வேட்டையாடப்பட்டதால் குறைந்து போயின. இப்போது, மீண்டும் சில நாடுகளில் அதிகமாகி வருகின்றன. நீர் எலிகள் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘நீர் எலிகள் இல்லாத ஆறு, வெறும் நீர் தான். இவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நீரை சுத்தமாக வைத்திருக்க உதவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும். உலகின் மிகச்சிறந்த இயற்கை பொறியாளர்கள் (Ecosystem Engineers)’ என்று கொண்டாடுகிறார்கள்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
