அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.
`மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருக்கிறார். `விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா நடித்திருக்கிறார். அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் 5வது திரைப்படம் இந்த `குட் பேட் அக்லி’. மேலும், பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி படத்தின் டீசரை கட் செய்திருக்கிறார். இதற்கு முன் அஜித்தின் `வலிமை’ , `துணிவு’ போன்ற படங்களின் எடிட் செய்தவரும் இவர்தான். அதுபோல, ஆதிக் ரவிசந்திரனின் `மார்க் ஆண்டனி’ படத்தை எடிட் செய்ததும் இவர்தான்

ஆதிக் ரவிசந்திரன் திரைப்படங்களின் டிரெய்லர், டீசர்களின் வழக்கமான பாணியிலேயே இப்படத்தின் டீசரையும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் ரிதத்திற்கேற்ப கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர். டீசரில் மூன்று கெட்அப்களில் அஜித் இருப்பதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
`வேதாளம்’ படத்திற்குப் பிறகு டார்க் ஷேட் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார் அஜித். கேங்ஸ்டராக இளமை காலத்தில் சில விஷயங்களை செய்து ஜெயிலுக்கு செல்பவராக அஜித் இருக்கிறார். அதன் பிறகு ஜெயிலிருந்து விடுதலையானப் பிறகு வில்லன்களை பழிவாங்குவதே படத்தின் கதை என சமூக வலைதளப் பக்கங்களில் ஃபேன் தியரியாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
டீசரில் காட்சிப்படுத்தியிருக்கும் மூன்று கெட்அப்களில் முக்கியமாக, இளமை கெட்டப்பில் அஜித் இருப்பது அப்படியே பில்லா படத்தின் டேவிட் பில்லா கதாபாத்திரத்தின் நினைவுகளை ரீ-கலெக்ட் செய்வதாக இருக்கிறது. படத்தில் அஜித்தின் பெயர் `AK’ என்பதையும் டீசரில் பதிவு செய்திருக்கிறார்கள். அஜித்தை தாண்டி படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் எவரையும் பெரிதாக டீசரில் காட்சிப்படுத்தவில்லை. பிரசன்னாவும், சுனிலும் அஜித்தின் கேங்கில் வருவதாக டீசரின் ஒரு சில காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள். த்ரிஷா, அர்ஜூன் தாஸ் என படத்தில் நடித்திருக்கும் மற்ற எவரையும் டீசரில் காட்சிப்படுத்தவில்லை.
இப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் ரிலீஸ் தள்ளிப்போவதாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டீசரில் மீண்டுமொரு முறை படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 10 என படக்குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள்.