கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.
ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பிறகு மீண்டும் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அவ்வப்போது படங்களில் நடித்து, விடுபட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜிவிஎம், ” “எல்லா தடைகளையும் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட முழு சக்தியையும் பயன்படுத்தி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.
தரமான ஆக்ஷன் திரில்லர், முதல் முறையாக ஜிவிஎம் – விக்ரம் காம்போ, பாடகர் பால்டப்பாவின் ‘His Name is John’ ஹிட் பாடல் என படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இப்படம் என்றைக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப் 28) செய்தியாளர் சந்திப்பில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், “ரொம்ப நாளாக எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருந்து ‘துருவ நட்சத்திரம்’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) தியேட்டர்ல ரிலீஸாகப் போகுது. நானே பலமுறை அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். ரிலீஸ் அன்னைக்கு எல்லாரோடும் சேர்ந்து பார்ப்பேன்” என்று பேசியிருக்கிறார்.