Kingston: `ஜி.வி.பிரகாஷை நடிக்க வேண்டாம்னு சொன்னேன்; அவர் நடிக்க இதுதான் காரணம்..!' – வெற்றிமாறன்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ்

இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ் குறித்தும், ‘கிங்ஸ்டன்’ படம் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், “ஜி.வி.பிரகாஷ் ஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என பிஸியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பிஸியான நேரங்களிலும் எப்போது அழைத்தாலும் உடனே அதற்குப் பதிலளித்து, நேரம் ஒதுக்குவார். ஒருநாளும் பிஸியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னதில்லை. அதுதான் அவரின் ஸ்பெஷல், அதுதான் அவரிடம் இருக்கும் நல்ல குணம்.

ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி ஜி.வி, ‘எனக்கு மியூசிக் மட்டுமே பண்ணுவது சலிப்பாக இருக்குது. ஒரே ரூம்ல இருக்கிறது சலிப்பாக இருக்கு. வெளிய போகணும், நடிக்கணும்னு நினைக்கிறேன்’ என்றார். அப்போது நிறைய பேர் அவரை நடிக்க வேண்டாம்னு சொன்னாங்க. அதில் நானும் ஒருத்தன். நல்ல மியூசிக் பண்ணிட்டு இருக்கார். இந்த நேரத்துல ஏன் நடிக்கணும்னு யோசிச்சேன். ஆனால், நடிச்சதுக்கு அப்றம் அவரோட மியூசிக் இன்னும் பிரமாதமாக, அடர்த்தியாக, ஆழமாக மாறியது. நடிப்பு அவருக்கு படத்தையும், கதையையும், காட்சியையும் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வெச்சுது. அதனால் அவரோட மியூசிக் முன்னவிடவும், முன்னேற ஆரம்பிச்சது.

வெற்றிமாறன்

நடிகராகவும் நல்லா பண்ணி காட்டினார். கற்றுக் கொண்டே இருக்கார். கற்றுக் கொள்ள அவர் தயங்குவதே இல்லை. தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கார்.

முதலில் நடிக்கும்போது என்னிடம் கேட்டார். அதுக்கு அப்புறம் சமீபத்துல என்னிடம், ‘நான் படம் தயாரிக்கப் போறேன். அதுவும் பெரிய படம் ஒன்னு எடுக்கப் போறேன். பெரிய பட்ஜட். தமிழில் முதன்முதலாக கடல் அட்வென்ச்சர் படம் இது. புது இயக்குநர்’ என்றார். அவ்வளவு ஆர்வத்துடன் பேசினார். தன்னோட ஒவ்வொரு பணியையும் அவ்வளவு ரசிச்சு, ஆர்வத்துடன் பண்ணுகிறார் ஜி.வி.

வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷ்

அந்தப் படத்தோட செட்ட பார்த்தேன். கடல் செட்ட பயங்கரமாக பண்ணியிருந்தாங்க. அதோட பட்ஜெட் பெரிசாக இருக்கும்ணு நினைச்சேன். ஆனால், நான் நினைச்சத விட கால் வாசிதான் அதன் பட்ஜெட். கம்மியான பட்ஜெட்ல பிரமாதமாக பண்ணியிருந்தாங்க. இந்தப் படம் ஹிட்டானா… ஜி.வி இன்னும் ஊக்கத்துடனும், ஆர்வத்துடன் சினிமாவில் பயணிப்பார். படத்திற்கு வரவேற்புக் கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.