பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடைபெறும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றிகூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அரங்கேறிய ஐ.சி.சி தொடரில் இப்படியா மோசமாக விளையாடுவது என வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது, யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், “தொலைக்காட்சி வர்ணனையில் விமர்சிக்காமல் களத்தில் இறங்கி பயிற்சி கொடுங்கள். உங்களுக்கு இம்ரான் கான் இருந்தது போல இன்றைய பாகிஸ்தான் அணிக்கு யாரும் இல்லை.” என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், யோகராஜ் சிங்கின் கருத்துக்குப் பிறகு முதல் முறையாக, தான் ஏன் பயிற்சியளிக்கத் தயாராக இல்லை என்று வாசிம் அக்ரம் விளக்கமளித்திருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் ஊடக நிகழ்ச்சியில் பேசிய வாசிம் அக்ரம், “வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆனபிறகு சில முறை நீக்கப்பட்டார். அந்த நிலைமையை நான் பார்க்கிறேன். அவர்களை நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் உதவ விரும்புகிறேன். அதற்கு நீங்கள் ஏன் எனக்குப் பணம் கொடுக்க விரும்புகிறீர்கள். நான் இலவசமாகச் செய்கிறேன்.

நீங்கள் ஒரு பயிற்சி முகாமைத் தயார் செய்து, அதில் நான் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் வருவேன். ஒரு பெரிய தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுடன் நான் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் அதைச் செய்வேன். ஆனால், எனக்கு 58 வயதாகிறது. இந்த வயதில், நீங்கள் செய்யும் இதுபோன்ற அவமானங்களை என்னால் ஏற்க முடியாது. இந்த வயதில் மன அழுத்தமான வாழ்க்கைக்குச் செல்ல முடியாது.” என்று கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
