அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) நிறைவடைய இருக்கிறது. அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் தகுதிபெற்றுவிட்டன. தென்னாப்பிரிக்கா தகுதிபெற 99% வாய்ப்புள்ளது. அந்த வகையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன.

IPL 2025: ஐபிஎல் அணிகளுடன் இணையும் வெளிநாட்டு வீரர்கள்

அப்படியிருக்க, ஐபிஎல் 2025 தொடர் (IPL 2025) வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் அணிகளின் வீரர்களும் விரைவில் இந்தியா திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க, ஆப்கானிஸ்தான் (Team Afghanistan) வெளியேறுவது உறுதியாகும்பட்சத்தில் அந்நாட்டு வீரர்களும் ஐபிஎல் அணிகளின் பயிற்சி முகாம்களுக்கு செல்வார்கள் எனலாம்.

IPL 2025: கலக்கும் அஸ்மதுல்லா ஓமர்சாய்

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடியவர் அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) ஆவார். அவர் பேட்டிங்கில் 3 இன்னிங்ஸில் 42 சராசரி உடன் 126 ரன்களை அடித்துள்ளார். அதேபோல், 20 சராசரியில் 7 விக்கெட்டுகளை ஓமர்சாய் வீழ்த்தியுள்ளார். அனைத்து அணிகளிலும் சல்லடைப்போட்டு தேடினாலும் இப்படியொரு ஆல்ரவுண்டர் கிடைப்பது அரிது. 2024இல் ஐசிசியின் ஓடிஐ அரங்கில் சிறந்த வீரருக்கான விருதை ஓமர்ஸாய் வென்றிருந்தார். அவரின் அதே ஃபார்ம் தற்போதும் தொடர்கிறது.

IPL 2025: எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார் ஓமர்சாய்?

எனவே, இவர் எந்த ஐபிஎல் அணியில் விளையாடுகிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த சில சீசன்களாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த நிலையில், இந்தாண்டு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

IPL 2025: பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ரூ.2.40 கோடிக்கு கொத்தாக அள்ளிப்போட்டது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சன் என பலமான ஆல்-ரவுண்டர்களை பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) வைத்திருக்கும் நிலையில், இதில் ஓமர்சாயும் இருப்பது கவனிக்கத்தக்கது. அவர் பவர்பிளேவிலும், டெத் ஓவர்களிலும் கைக்கொடுப்பார் எனலாம்.

IPL 2025: ஆப்கான் வீரர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்?

இவரை தவிர ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியிலும், நூர் அமகது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முஜீப் உர்-ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ், ஃபசல் ஹக் ஃபருக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், குர்பாஸ் அகமது கொல்கத்தா அணியிலும், கரீம் ஜனட் குஜராத் அணியிலும் விளையாடுகின்றனர்.

IPL 2025: இந்த ஆப்கான் வீரர்களுக்கு வாய்ப்பில்லை

நவீன் உல்-ஹக், வக்கார் சலாம்கீல், குல்புதீன் நைப், முகமது நபி உள்ளிட்டோரை யாரும் வாங்கவில்லை. அல்லா கசன்ஃபரை மும்பை இந்திய அணி எடுத்த நிலையில், அவர் காயம் காரணமாக விலகவே முஜீப் உர்-ரஹ்மானை மாற்று வீரராக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.