திருச்சி: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தி்ல், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து மட்டும்தான் பேச வேண்டும். கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்தார் பழனிசாமி. அப்போது எங்களைப் பார்த்து அடிமை என்றார்கள். தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவது அடிமைத்தனம் கிடையாது.
மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்ததால்தான் திட்டங்களைப் பெற முடிந்தது. மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய நாங்கள் யாருடனும் இணக்கமாக செல்லத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் நிதியை பெற்றுத் தருவோம்.
திமுக மீது மக்களுக்கு செல்வாக்கு குறைந்ததால்தான், மும்மொழிக் கொள்கை மற்றும் மக்களவைத் தொகுதி மறுவரையறை பிரச்சினையைக் கையில் எடுத்து, மக்களை திசை திருப்புகிறார்கள். வரும் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து மட்டும்தான் பேச வேண்டும். கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது. ஒருவர் (தவெக தலைவர் விஜய்) அடுத்த 62 வாரங்கள் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்கிறார். அவரே இதை கூறிக் கொள்ளக்கூடாது. மக்கள் தான் அதைக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.