உத்தராகண்ட் பனிச்சரிவு: மேலும் 14 பேர் மீட்பு; எஞ்சியோரை மீட்கும் பணிகள் தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நடந்தது என்ன? உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன் கூறுகையில், “பிஆர்ஓ முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படும் 57 தொழிலாளர்களில் இரண்டு பேர் விடுப்பில் உள்ளனர். உண்மையில் பனிச்சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 55. பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஏழு அடிக்கு பனி சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது கொஞ்சம் சிரமமாகவே உள்ளது. என்றாலும், மீட்பு பணிகளில் 65 பேர்ஈடுபட்டுள்ளனர்.” என்றார்.

முன்னதாக, சம்பவம் அறிந்தவுடன் உரிய மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சமோலி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர் சகோதரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட பத்ரிநாதரை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பனிச்சரிவில் சிக்கி அணுக முடியாத இடங்களில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.

ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் தடை: தொடர் மழை காரணமாக மலைகளில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், கர்ணபிரயாங்க் பகுதியில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பனிச்சரிவுகள் ஏற்பட்டதால் இன்னும் தடை நீடித்து வருகிறது. போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.