புதுடெல்லி: உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள உயரமான மனா கிராமத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்பட்ட பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
5 பேரை தேடும் பணியில் இந்திய ராணுவ விமானப் படையின் 3 ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள், ஒரு சிவில் காப்டர் உட்பட ஆறு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, லெப்டினன்ட் ஜெனரல் டி ஜி மிஸ்ரா ஆகியோர் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க பனிச்சரிவு ஏற்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பனியால் மூடப்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்துக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்த லெப்டினன்ட் ஜெனரல் சென்குப்தா, பத்ரிநாத் – ஜோஷிமத் நெடுஞ்சாலையில் 15-20 இடங்களில் தடை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
நடந்தது என்ன? – உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் தடை: தொடர் மழை காரணமாக மலைகளில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், கர்ணபிரயாங்க் பகுதியில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பனிச்சரிவுகள் ஏற்பட்டதால் இன்னும் தடை நீடித்து வருகிறது. போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.