நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியார் தேவாலய திருவிழாவில் சனிக்கிழமை அலங்கார பணிகளை மேற்கொண்டபோது உயரமான இரும்பு ஏணி உயரழுத்த மின்கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 4 மீனவர்கள் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதியில் இனயம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நாளை (மார்ச் 2) நடைபெறவுள்ள நிலையில், தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொருட்களை அகற்றும் பணியும், அலங்காரம் மேற்கொள்ளும் பணியும் இன்று நடைபெற்றது.
இதற்காக, சக்கரங்களுடன் கூடிய உருட்டி செல்லும் வகையில் அமைந்துள்ள 30 அடிக்கு மேல் உயரம் கொண்ட இரும்பு ஏணியை பயன்படுத்தி, பக்தர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை ஏணியை தேவாலயம் முன்பிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றபோது அங்கு சென்ற 11 கேவி உயரழுத்த மின்கம்பில் ஏணி உரசியது. இதில் மின்சாரம் ஏணியில் பாய்ந்து ஏணியை உருட்டி சென்ற இனையம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர்களான விஜயன் (52), ஜங்டஸ்(35), சோபன் (45), மதன்(45) ஆகிய 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதில் 4 பேரும் ஏணியை விட முடியாததால் உடல் கருகினர். அவர்களின் உடல் மீது தீப்பொறி பற்றியதால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பெண்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் கூடி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மின்சாரம் பாய்ந்ததால் யாரும் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
உடனடி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைடுத்து 4 பேரின் உடலை மீட்ட மக்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்த்துகு வந்து விசாரணை மேற்கொண்டனர். தேவாலய திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 4 மீனவர்கள் இறந்த சம்பவம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலா ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 1) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் ( 52) , சோபன் (45) , மனு ( 42) மற்றும் ஜெஸ்டிஸ் ( 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.