சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட ரிசர்வ் போலீஸார் (டிஆர்ஜி), சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான கோப்ரா கமாண்டோ பிரிவினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். சண்டை ஓய்ந்ததும் அங்கு போலீஸார் தேடியபோது 2 மாவோயிஸ்ட்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று மாவட்ட போலீஸ் எஸ்.பி. கிரண் சவாண் தெரிவித்தார்.
இந்த ஆண்டு போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில் இதுவரை 83 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் கிரண் சவாண் தெரிவித்தார். இதில் 67 பஸ்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.