சப்தம் விமர்சனம்: இந்த அமானுஷ்யக் கதை வெறும் சப்தமா, வருடிக்கொடுக்கும் இசையா?

மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ‘பேய் நடமாட்டத்தால்தான் இப்படி நடக்கிறது’ என வெளியே பேச்சுகள் எழுகின்றன. அதற்காக, அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து, கண்டுபிடித்து, அதனுடன் உரையாடும் நிபுணரான பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் (Paranormal Investigator) ரூபன் (ஆதி) கல்லூரிக்கு வரவழைக்கப்படுகிறார். தன்னிடமுள்ள அதிநவீன கருவிகள் மூலமாக மொத்த கல்லூரியையும் அலசுகிறார்கள் ரூபன்.

சப்தம் விமர்சனம்
சப்தம் விமர்சனம்

அப்போது, அதே கல்லூரியில் இளநிலை விரிவுரையாளராக இருக்கும் அவந்திகா (லட்சுமி மேனன்) மீது ரூபனின் சந்தேகப் பார்வை திரும்புகிறது. அவந்திகாவைப் பின்தொடரும் ரூபனின் (அமானுஷ்ய) விசாரணை பயணத்திற்கிடையில் மர்மங்களும் கொலைகளும் நிகழ, இறுதியாக அவற்றைச் சரி செய்து, உண்மையான பிரச்னை என்ன என்பதை அவர் கண்டறிந்தாரா என்பதே அறிவழகன் இயக்கியிருக்கும் ‘சப்தம்’ படத்தின் கதை.

பெரிய மெனக்கெடல் தேவைப்படாத கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஆதி. மர்மமாக வடிவமைக்கப்பட்ட அவந்திகா கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து, அதை ஓரளவிற்குக் கரைசேர்த்திருக்கிறார் லட்சுமி மேனன். சிம்ரனுக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் பட்டும் படாமல் வந்து போகிறார்கள். அழுத்தமும் ஆக்ரோஷத்தையும் கோரும் கதாபாத்திரத்திற்கு எவ்வகையிலும் பொருந்திப் போகாமல், சுமார் ரக நடிப்பை வழங்கியிருக்கிறார் லைலா.

சப்தம் விமர்சனம்
சப்தம் விமர்சனம்

அமானுஷ்ய கதகளிக்கிடையே, காமெடியைத் தூவிவிடப் போராடியிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். அமானுஷ்யமும் திகிலும் நிறைந்த திரைக்கதைக்குத் தேவையான மிரட்டலான ஒளிப்பதிவைத் தன் ஒளியமைப்பால் கொடுத்திருக்கிறது அருண் பத்மநாபனின் கேமரா. பதற்றத்தின் வீரியம் குறையாமல் காட்சிகளை நுணுக்கமாகக் கோர்த்திருக்கிறது வி.ஜே. சாபு ஜோஸப்பின் படத்தொகுப்பு. தமன் இசையில் ‘மாயா மாயா’ பாடல் மர்மத்தைக் கூட்ட உதவியிருக்கிறது. அவரே தன் பின்னணி இசையால், பல இடங்களில் பயத்தையும், பதைபதைப்பையும் திரியில்லாமல் பற்ற வைத்திருக்கிறார்.

சர்ச், மருத்துவக் கல்லூரி, பழைய நூலகம் என எல்லா ப்ரேமிலும் கலை இயக்குநர் மனோஜ் குமாரின் வேலைப்பாட்டை உணர முடிகிறது. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு ஆணிவேராக இருக்க, ஆடியோகிராபர் டி. உதய்குமார் மற்றும் சின்க் சினிமாவின் நேர்த்தியான ஒலியமைப்பு படத்திற்கு மகுடமாக மாறியிருக்கிறது. ஆனாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் இதே சப்தம் ஓவர்டோஸாவதைத் தவிர்த்திருக்கலாம்.

சப்தம் விமர்சனம்
சப்தம் விமர்சனம்

திகிலான கல்லூரி, மர்ம மரணங்கள், அதைத் தீர்க்க வரும் அமானுஷ்யங்களுடன் உரையாடும் நிபுணர் எனத் தொடக்கத்தில் கச்சிதமான த்ரில்லர் களமாக விரிக்கிறது படம். அமானுஷ்ய சக்திகளுடன் உரையாடப் பயன்படுத்தும் கருவிகள், அவை குறித்த விளக்கங்கள், அமானுஷ்யங்களைக் கண்டுபிடிக்கும் முறை, லட்சுமி மேனனுடனான விவாதம் எனச் சுவாரஸ்யத்தோடு நகர்கிறது திரைக்கதை. சிறிது, சிறிதாக மர்மங்களும், கேள்விகளும் நிதானமாகப் பின்னப்பட்டாலும், தேவையான அழுத்தத்தோடு நகர்கிறது. வௌவாலையும், அதன் ஒலியையும் பயன்படுத்திய விதம் கவனிக்க வைக்கிறது. ஆனால், இடைவேளையை நெருங்கும்போது, இந்த நிதான நடையும், முடிச்சுகளும் அயற்சித்தட்ட தொடங்கிவிடுகின்றன. பரபரப்பான இடைவேளை காட்சியும், அது எடுக்கப்பட்ட விதமும் ஒரு ப்ளாஸ்ட்டாக மாறி, முதற்பாதியைக் காப்பாற்றுகிறது.

முதற்பாதியில் போடப்பட்ட முடிச்சுகளையும், மர்மங்களையும் இரண்டாம் பாதியில் பின்கதையின் உதவியால் அவிழ்த்து, விளக்குகிறது திரைக்கதை. ஆனால், அந்த பிளாஷ்பேக் போதுமான ஆழத்தோடு எழுதப்படாததால், அழுத்தமில்லாத சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன. சிம்ரன், லைலா, ராஜிவ் மேனன் எனப் பலர் இருந்தும், உணர்வுபூர்வமான காட்சிகளாக அவை விரியாதது பெரிய மைனஸ்.

சப்தம் விமர்சனம்
சப்தம் விமர்சனம்

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இசை சிகிச்சை, ஒலி மருத்துவ ஊழல், மெக்ஸிக்கோ ப்ளாக் மேஜிக், வௌவால், சாத்தான், அறிவியல் வெர்சஸ் அமானுஷ்யம், ஓசை ஆராய்ச்சி, ஆவி ஆராய்ச்சி மையம் என அஞ்சறைப் பெட்டியைக் கவிழ்த்து விட்டது போல, வகை வகையான கான்செப்ட்கள் இறுதிக்காட்சி வரை கொட்டியிருப்பது பார்வையாளர்களுக்குச் சுவையாக அல்லாமல் சுமையாகவே மாறியிருக்கிறது. முதற்பாதியில் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவிய இசையும், ஒலியும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் ஓவர் டோஸாக மாறிவிடுகின்றன. கொலைகள், ஹீரோ வருகை, பின்கதை, பழிவாங்கல் என டெம்ப்ளேட் கதையாக முடிவதும் ஏமாற்றமே!

தொழில்நுட்ப ரீதியான மெனக்கெடலை மட்டும் நம்பாமல், திரைக்கதையை ஆழமாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளை அழுத்தமாக்கியிருந்தால், இந்த ‘சப்தம்’ இன்னும் ஓங்கி ஒலித்திருக்கும்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.