ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி காரசார விவாதம்: உலக நாடுகளின் எதிர்வினை  

பாரீஸ்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்து, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் ட்ரம்ப் பொறுமையிழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி காட்டாததற்காக அவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக கண்டித்தார். பின்பு, ஜெலன்ஸ்கி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்றும், ஓவல் அலுவலகத்துக்கே வந்து அமெரிக்காவை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் உலக அளவில் அரசியல் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவைகளில் சில இங்கே:

ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களான உர்சுலா வோன் டேர் லேயான் மற்றும் அன்டோனியோ கோஸ்டா, ‘ஜெலன்ஸ்கி தனியாள் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் சமூக வலைதளத்தில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “வலிமையாக, தைரியமாக, அச்சமில்லாமல் இருங்கள். ஒரு நியாயமான நீடித்த அமைதிக்காக உங்களுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். சுதந்திரமான உலகுக்கு ஒரு புதிய தலைவர் தேவை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் சவாலை ஏற்றுக்கொள்வது ஐரோப்பியர்களான நமது கையில்தான் உள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “ரஷ்யா என்றொரு ஆக்கிரமிப்பாளார். அதனால் உக்ரைன் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு உதவ எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவுக்கு தடைவிதித்தோம். அதனைத் தொடர்ந்து செய்வோம். மூன்றாம் உலகப் போர் வைத்து யாராவது விளையாடுகிறார் என்றால் அது புதின்தான்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி: ஜெர்மனியின் அடுத்த அதிபராக வர இருக்கிற ஃப்ரெட்ரிக் மேர்ஸ் எஸ்க் பதிவொன்றில், “இந்த பயங்கரமான போரில் யார் ஆக்கிரமிப்பாளர்கள், யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலி: இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறுகையில், “சமீப ஆண்டுகளில் நாங்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வரும் உக்ரைன் உட்பட இன்றைய முக்கிய சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து விவாதிக்க உடனடியாக ஒரு உச்சி மாநாட்டு தேவை.” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் கேய்ர் ஸ்டார்மர் மற்ற ஐரோப்பிய தலைவர்களைப் போல உக்ரைனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை அடிப்படையாக கொண்ட நீடித்த அமைதியை நோக்கி முன்னேறுவதற்கான தீர்வை கண்டடைய அனைத்து விஷயங்களையும் செய்வேன் என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை சந்திப்புக்கு பின்பு அவர் இரண்டு நாட்டு அதிபர்களுடன் தனித்தனியாக பேசினார்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.