ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரியிலிருந்து 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 38 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும் 42 தமிழக மீனவர்கள், 13 காரைக்கால் மீனவர்கள் நீதிமன்ற விசாரணையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் பிப்ரவரி 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று (பிப்.28) தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரத போராட்டத்தை நேற்று மாலையுடன் முடித்துக் கொண்டனர். இதனையடுத்து இன்று (மார்ச் 1) தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், மகளிரணி மாவட்டச் செயலாளர் கவிதா சசிகுமார் உள்ளிட்ட அதிமுகவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் குருவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில மீனவ சங்க நிர்வாகி சி.ஆர்.செந்தில்வேல், தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் மூக்கையூர், ரோஜ்மா நகர் மீனவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், ராமேசுவரம் வட்டாட்சியர் ஜப்பார் ஆகியோர், போராட்டத்தில் பங்கேற்றிருந்த மீனவ சங்க தலைவர் எமரிட் உள்ளிட்ட பிரதிநிதிகளை ஆட்சியரிடம் பேச ராமநாதபுரம் அழைத்து வந்தனர். அப்போது ஆட்சியரிடம், “இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மீனவ சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆட்சியர் தமிழக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய பின், மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பொறுத்திருந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார். ஆனால் மீனவ சங்க பிரதிநிதிகள் அதற்கு ஒத்துக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக கூறிவிட்டு சென்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.