ஹைதராபாத்: தெலங்கானாவில் சுரங்கம் இடிந்த விபத்தில் 8 பேர் சிக்கிய நிலையில், அவர்களில் 4 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இது ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) என அழைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகர் கர்னூல் மாவட்டம், தோமலபெண்டா 14-வது கி.மீ. அருகே சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்.22-ம் தேதி காலையில் முதல் ஷிப்ட்டில் பணியாற்றும் 50 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென மேற்கூரை இடிந்து 3 மீட்டர் வரை சுரங்கத்தினுள் மண் விழுந்தது. இதில், 8 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் ஒரு வார காலமாக நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் அமைச்சர்கள் உத்தம்குமார் ரெட்டி, ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா ராவ், “கடந்த இரண்டு நாட்களில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 4 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அவர்கள் மீட்கப்படுவார்கள். மற்ற நான்கு பேர் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தின் (TBM) அடியில் சிக்கியதாகத் தெரிகிறது” என்று கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பேரின் நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கிருஷ்ணா ராவ், ”உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று முதல் நாளிலேயே தான் கூறினேன். 450 அடி உயரமுள்ள சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் வெட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் சுமார் 11 நிறுவனங்களின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை தாமதமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, “இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிபுணர்கள். சுரங்கப் பாதைக்குள் சேறு இருக்கிறது. மீட்புப் பணி சிக்கலானது. அதன் காரணமாகவே தாமதமாகிறது” என்று கூறினார்.