புதுடெல்லி: மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மார்ச் 8-ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கடந்த 2023 மே மாதம் முதல் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (மார்ச் 1) நடந்தது. டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில் மாநிலத்தில் கலவரத்துக்கு முந்தைய நிலைமையை மீட்டெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பு, இதுபோன்ற உயர் மட்ட அளவிலான கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் துணை ராணுவ படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மார்ச் 8ம் தேதி முதல் மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாக நடக்கும் நிலைமையை உறுதி செய்யவேண்டும்.சாலைகளில் தடைகளை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மணிப்பூரில் நிலவி வந்த நீடித்த அமைதியை மீட்டெடுப்பதிலும், அதற்கான அனைத்து உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு உறுதியாகவும் தயாராகவும் உள்ளது.
மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை தொடரவேண்டும். மணிப்பூரில் உள்ள சர்வதேச எல்லைகளில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நுழைவுப் பகுதிகளின் இருபுறமும் முள்வேலி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மணிப்பூரை போதையில்லாத மாநிலமாக மாற்றுவதற்கு போதைப் பொருள் விற்பனை தொடர்பான அனைத்து வலையமைப்புகளையும் அழிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஆளுநர் பல்லா பிப்.20 இறுதி எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த ஆலேசானைக் கூட்டம் நடந்துள்ளது. ஆளுநரின் 7 நாள் இறுதி எச்சரிக்கை கெடுவினைத் தொடர்ந்து 300க்கும் அதிகமான ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. மைத்தேயி குழுவான அரம்பாய் தெங்கோல், சுமார் 246 துப்பாக்கிகளை ஒப்படைத்தது.
இதனிடையே, பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களின் வேண்டுகோளின் படி, ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கெடு மார்ச் 6-ம் தேதி மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 2027 வரை மணிப்பூர் பேரவைக்கான பதவி காலம் இருக்கும் நிலையில் முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியை பிப்.13 தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.