அவிநாசி: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரையில் `வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின் 11-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘சூழலியல் மாற்றத்தில் தொழில்முனைவோர் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்குகிறோம். வரும் மே மாதம் வரை 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக மக்களைத் குழப்ப வேண்டாம். விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும். எனவே, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. இந்தக் கூட்டம் பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியாகும்.
முதல்வர் பிறந்த நாள் விழா என்ற பெயரில் அனைவரும் பாஜகவை திட்டி உள்ளனர். அரசியல் நாகரிகம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு கிடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
சீமான் வீட்டில் சம்மன் கிழித்த விவகாரத்தில் காவல் துறை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் இருப்பவர்களிடம் சம்மன் கொடுத்திருக்கலாம். தேடப்படும் குற்றவாளி வீட்டில்தான் சம்மனை ஒட்டுவார்கள். காவல் துறை நடந்துகொண்ட விதம் ஏற்புடையதல்ல.
மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திருமாவளவன், சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது ஏன்? மயிலாடுதுறையில் மூன்றரை வயது குழந்தை விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்தது வரவேற்கத்தக்க விஷயம்.
திமுகவினர் குறுநில மன்னர்கள்போல செயல்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்களை நான் மதிக்கிறேன், ஆனால் உதயநிதி ஸ்டாலினை நான் தலைவராக மதிக்கவில்லை.
திருப்பூரில் பல பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரை சந்திக்க உள்ளோம். வேங்கைவயல்போல இந்த பிரச்சினையையும் கையாளக் கூடாது. சிபிஐ விசாரணைதான் இதற்கு தீர்வு. இவ்வாறு அவர் கூறினார்.