கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் குழு வெளியேற்றம் என அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் ரியாக்ஷன்களுடன் கூடிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ‘உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப் பெரிய உதவியை வழங்கி வரும் நிலையில், அதற்காக நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஜெலன்ஸ்கி ஒருமுறைகூட நன்றி தெரிவிக்கவில்லை’ என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தை கடினமாக இருந்த நிலையில், கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஜெலன்ஸ்கி வெளியேறினார். மேலும், அதிபர் ட்ரம்ப் அளிக்க இருந்த விருந்தும் ரத்து செய்யப்பட்டது.
ட்ரம்ப் அறிக்கை: இதையடுத்து, டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “இன்று வெள்ளை மாளிகையில் மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம். மிகப் பெரிய நெருக்கடி இருக்கும்போது உரையாடல் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்பது உட்பட பலவற்றைக் கற்றுக்கொண்டோம். உணர்ச்சிவசப்படும்போது என்ன வெளிவருகிறதோ, அது ஆச்சரியமாக இருக்கிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபடுவதை ஜெலன்ஸ்கி வரும்பவில்லை என்பதாகவே நான் தீர்மானித்துள்ளேன். ஏனென்றால், அமைதி பேச்சுவார்த்தைகளில் நமது ஈடுபாடு, நமக்கு பெரிய நன்மையாகிவிடும் என்று அவர் கருதுகிறார். எனக்கு நன்மை வேண்டாம், எனக்கு அமைதி வேண்டும். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தை அவர் அவமதித்துவிட்டார். இனி, அவர் அமைதிக்குத் தயாராக இருந்தால் மட்டும் இங்கு திரும்பி வரலாம்” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
ஜெலன்ஸ்கி பதிவு: இதனிடையெ, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவுகளில், “அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதிபர்ட் டிரம்ப், அமெரிக்க காங்கிரஸ் இருவரது ஆதரவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். உக்ரைனியர்கள் எப்போதும் இந்த ஆதரவைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, இந்த மூன்று ஆண்டுகால முழு அளவிலான படையெடுப்பின்போது நாங்கள் பாராட்டி இருக்கிறோம்.
அமெரிக்காவின் உதவி நாம் உயிர்வாழ உதவுவதில் இன்றியமையாததாக இருந்து வருகிறது, அதை நான் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். கடினமான பேச்சுவார்த்தை இருந்தபோதிலும், நாம் நெருக்கமான பங்குதாரர்களாகவே இருக்கிறோம். ஆனால், நமது பகிரப்பட்ட இலக்குகளை உண்மையிலேயே புரிந்துகொள்ள நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாகவும் நேரடி தொடர்பிலும் இருக்க வேண்டும்.
அதிபர் டிரம்பின் ஆதரவு நமக்கு மிகவும் முக்கியம். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால், அமைதியை எங்களை விட விரும்புபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. உக்ரைனில் இந்தப் போரில் வெற்றி நமக்கே. இது நமது சுதந்திரத்துக்கான, நமது உயிர்வாழ்வுக்கான போராட்டம். நாம் நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், ரஷ்ய அதிபர் புதினுடன் போர் நிறுத்தம் ஏற்படாது. கடந்த 10 ஆண்டுகளில் அவர் 25 முறை போர் நிறுத்தங்களை மீறியுள்ளார். உண்மையான அமைதிதான் ஒரே தீர்வு.
கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயாராக இருக்கிறோம். அது, உக்ரைனின் பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை நோக்கிய முதல் படியாக இருக்கும். அதேநேரத்தில், அது மட்டுமே போதுமானது அல்ல. அதற்கு மேலாக நமக்குத் தேவை இருக்கிறது. பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர் நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ரஷ்யா குறித்த உக்ரைனின் நிலைப்பாட்டை என்னால் மாற்ற முடியாது. ரஷ்யர்கள் எங்களைக் கொல்கிறார்கள். ரஷ்யா எங்களுக்கு எதிரி. அதுதான் நாம் எதிர்கொள்ளும் யதார்த்தம். உக்ரைன் அமைதியை விரும்புகிறது. ஆனால், அது ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு, பேச்சுவார்த்தையில் நாம் வலுவாக இருக்க வேண்டும். நமக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருப்பதை நாம் அறிந்தால், நமது ராணுவம் வலுவாக இருக்கும்போது, நமது கூட்டாளிகள் நம்மோடு இருக்கும்போது, இவை அனைத்தும் இருக்கும்போது மட்டுமே அமைதி வரும்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதனால்தான் நான் அமெரிக்காவுக்கு வந்து அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தேன். கனிமங்கள் மீதான ஒப்பந்தம் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் அமைதியை நெருங்குவதற்கான முதல் படியாகும். எங்கள் நிலைமை கடினமாக உள்ளது. ஆனால், புதின் மீண்டும் போருக்கு வரமாட்டார் என்ற உத்தரவாதம் இல்லாமல் சண்டையிடுவதை நிறுத்த முடியாது.
அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் போர் நிறுத்தம் என்பது கடினமாக இருக்கும். ஆனால், நமது விருப்பத்தையோ, சுதந்திரத்தையோ, மக்களையோ நாம் இழக்க முடியாது. ரஷ்யர்கள் நம் வீடுகளுக்குள் வந்து பலரைக் கொன்றதை நாம் பார்த்திருக்கிறோம். யாரும் மீண்டும் ஆக்கிரமிப்பு அலையை விரும்பவில்லை. நேட்டோவில் நம்மை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அமெரிக்கா உள்ளிட்ட உள்ள நமது நட்பு நாடுகளிடமிருந்து தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் நமக்குத் தேவை.
எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஐரோப்பா தயாராக உள்ளது. மேலும், நமது பெரிய ராணுவத்துக்கு நிதியளிக்கவும் ஐரோப்பா தயாராக உள்ளது. பாதுகாப்பு உத்தரவாதங்களை வரையறுப்பதில் அமெரிக்காவின் பங்கும் நமக்குத் தேவை. இந்த உத்தரவாதங்கள் நடைமுறைக்கு வந்தவுடன் ரஷ்யா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம்.
ரஷ்யா எங்கள் வீடுகளை ஆக்கிரமித்தது, எங்கள் மக்களைக் கொன்றது, எங்களை அழிக்க முயன்றது. இது எண்களைப் பற்றியது மட்டுமல்ல. இது உண்மையான வாழ்க்கையைப் பற்றியது. இதைத்தான் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா எங்கள் பக்கம் இன்னும் உறுதியாக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மட்டுமல்ல; ரஷ்யா இந்தப் போரை எங்கள் பிரதேசத்திலும் எங்கள் வீடுகளிலும் கொண்டு வந்தது.
அனைத்து உக்ரைனியர்களும் அமெரிக்காவின் வலுவான ஆதரவை விரும்புகிறார்கள். அமெரிக்கா புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், அமெரிக்கா எப்போதும் ‘வலிமை மூலம் அமைதி’ பற்றிப் பேசுகிறது. மேலும் நாம் ஒன்றாக சேர்ந்து புதினுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடியும். அமெரிக்க அதிபருடனான எங்கள் உறவு வெறும் இரண்டு தலைவர்களை விட அதிகம்; இது எங்கள் மக்களுக்கு இடையிலான வரலாற்று மற்றும் உறுதியான பிணைப்பு. அதனால்தான் நான் எப்போதும் எனது நாட்டில் இருந்து நன்றி தெரிவிக்கும் வார்த்தைகளுடன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறேன்.
அமெரிக்க மக்கள், எங்கள் மக்களைக் காப்பாற்ற உதவினார்கள். மனிதகுலமும் மனித உரிமைகளும் முதன்மையானவை. நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். மேலும் நாங்கள் அந்த உறவுகளைப் பெறுவோம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.