புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்று டெல்லி பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தலைநகரில் காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிஸ்ரா இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலேசானை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நகரில் வாகனங்களின் புகை வெளியேற்றத்தை குறைப்பதற்காக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறது. நாங்கள் பெட்ரோல் பங்க்-குகளில் ஒரு கருவியை பொருத்த உள்ளோம். அது 15 வருடங்கள் பழமையான வாகனங்களை அடையாளம் காண உதவி செய்யும். அதன்பின்பு அந்த வண்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது. மாநில அரசின் இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலிய துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை தீவிரமாக அமல்படுத்துவும், விதிகளை மீறும் வாகனங்களை அடையாளம் காணுவும் சிறப்பு அதிரடி பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு மார்ச் 31-க்கு பின்பு இந்த விதியை தீவிரமாக அமல்படுத்தும். கூடுதலாக, டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்களைத் தீவிரமாக கண்காணிக்க உள்ளோம். அவ்வாறான வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர அளவுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
நகரில் மிகப் பெரிய ஹோட்டல்கள், பெரும் வணிக வளாகங்கள், டெல்லி விமான நிலையம், பெரிய கட்டுமான நிறுவனங்களும் உள்ளன. அவை இருக்கும் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புகை எதிர்ப்பு கருவி பொருத்தப்படுவதை கட்டாயமாக்க உள்ளோம். அதேபோல் டெல்லியில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்களுக்கும் இதே விதியைக் கட்டாயமாக்க உள்ளோம்.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் டெல்லி பொதுப் போக்குவரத்துக்காக பயன்பாட்டில் உள்ள சிஎன்ஜி பேருந்துகளில் 90 சதவீதம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மின்சாரப் பேருந்துகள் கொண்டுவரப்படும். இது பொதுப் போக்குவரத்தை தூய்மையானதாகவும், நிலையானதாகவும் மாற்றும் அரசு முயற்சியைக் குறிக்கிறது” என்று தெரிவித்தார்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் ஏற்கெனவே 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான டீசல், 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான பெட்ரோல் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்த விதி மேலும் தீவிரமாக்கப்பட்டது. 2022 ஜனவரி 1-க்கு பின்பு இந்த விதியை மீறுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது.