Delimitation: "அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது" – அண்ணாமலை சொல்லும் காரணங்கள் என்ன?

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. `மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடைபிடித்துவரும் தென்னிந்திய மாநிலங்களில் தற்போதிருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இதனால், நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகள் சார்ந்து குரலெழுப்புவதை மத்திய அரசு நசுக்கப்பார்க்கிறது’ எனத் தென்னிந்திய ஆளுங்கட்சிகள் எதிர்கின்றன.

 நாடாளுமன்றம் - Delimitation
நாடாளுமன்றம் – Delimitation

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான முதல்வரின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “தொகுதி மறுவரையறை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, தொகுதி மறுவரையறை குறித்து நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் கற்பனையான அச்சங்களைப் பரப்பவும், அது குறித்து வேண்டுமென்றே பொய் சொல்லவும் மட்டுமே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமீபத்திய தமிழக வருகையின் போது கூட, தொகுதி மறுவரையறையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்றும், தொகுதி மறுவரையறை என்பது, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

தொகுதி மறுவரையறைக்கான அறிவிப்பு, தொகுதி மறுவரையறை ஆணையத்தினால் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டபோதும், நீங்கள் பொய்களைப் பரப்பி, பின்னர் அந்தப் பொய்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டதற்குப் பிறகும் நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. “எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவே உரிமைகள்” என்று பொருள்படும் “ஜித்னே அபாதி உத்னி ஹக்” என்று திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி பிரசாரம் செய்தது. கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கூட்டணியின் இந்த பிரச்சாரம், தொகுதி மறுவரையறையின்போது, மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்தியுள்ள தென்மாநிலங்களைப் பாதிக்கும் என்று கூறி பதிலடி கொடுத்தார்.

தொகுதி மறுவரையறை காரணமாக, தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்ற கற்பனையான பயம் உங்களுக்கு முன்னரே இருந்திருந்தால், சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, உங்கள் 39 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்க முடியும். ஆனால், உங்கள் நான்கு ஆண்டுகால நிர்வாகச் சீர்கேட்டினால் பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, கடந்த ஒரு வாரமாக நீங்கள் பரப்பிய கற்பனையான இந்தித் திணிப்பு நாடகத்தைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், திடீரென்று ஒரு நாள் விழித்தெழுந்து, தொகுதி மறுவரையறை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு, திசைதிருப்ப முயற்சித்திருக்கிறீர்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 848-ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த 848 என்ற எண்ணிக்கை உண்மையானதா என்பது குறித்த ரகசிய ஆவணம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, தமிழக மக்களின் நலனுக்காக அந்த ஆவணத்தை நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களவை இடங்களின் எண்ணிக்கை 753-ஆக அதிகரிக்கலாம் என்று நேற்று ஒரு முன்னணி பத்திரிகை ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. நாளை, இன்னொரு பத்திரிகை, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரிக்கலாம் என்று ஒரு கட்டுரையை வெளியிடலாம். இவை வெறும் ஊடக யூகங்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்ல. இந்த யூகங்களின் அடிப்படையில், தமிழகம் எத்தனை இடங்களைப் பெறும் அல்லது இழக்கும் என்று நீங்கள் முடிவெடுப்பீர்களா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை இல்லையா? சத்தியப் பிரமாணம் செய்து, அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்ற உங்கள் பொறுப்பை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இவற்றை நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா?

அண்ணாமலை
அண்ணாமலை

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5, 2025 அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.