IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் 2025 தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையோடு (மார்ச் 2) நிறைவடைய இருக்கின்றன. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.
IND vs NZ: துபாயில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா
குரூப் – பி போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. குரூப் – பி பிரிவில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தையும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளில் எந்த அணி துபாயில் இந்திய அணியுடன் முதல் அரையிறுதியில் மார்ச் 4ஆம் தேதி விளையாடும் என்பது நாளைய இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு பின்னரே தெரியவரும்.
இந்தியா – நியூசிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் குரூப் – ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். முதலிடத்தை பிடிக்கும் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் (B2), இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும் (B1) மேற்கொள்ளும். தற்போது இரு அணிகளும் துபாயில் விளையாடும் வாய்ப்பிருப்பதால் அரையிறுதிப் போட்டிக்கு தயார் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இரு அணிகளுமே துபாய்க்கு பறக்கின்றன.
IND vs NZ: அரையிறுதியில் இந்திய மோதப்போவது யாருடன்?
அந்த வகையில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவையும், தோல்வியடைந்தால் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ளும். இரு அணிகளையும் எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதால் அவர்களை வீழ்த்த நாளை நியூசிலாந்துக்கு எதிரான குரூப் சுற்று போட்டியை வெல்ல வேண்டியது முக்கியமாகும். துபாயில் நாளை மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் முழு போட்டியையும் காணும் வாய்ப்புள்ளது.
IND vs NZ: துபாய் ஆடுகளம் நியூசிலாந்துக்கே சாதகம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் செயலியிலும் நேரலையில் காணலாம். துபாய் ஆடுகளம் ஆரம்பத்தில் பெரிதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், வில் ஓ ரூக் உள்ளிட்ட தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே, துபாய் ஆடுகளம் நியூசிலாந்துக்கே அதிக சாதகமாக இருக்கும்.
IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம்
துபாயில் இரண்டாவது பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்தியாவை போல் நியூசிலாந்து அணியும் டாஸ் வென்றால் முதலில் பந்துவீசவே திட்டமிடும். கடந்த இரண்டு போட்டிகளில் டாஸ் வெல்லவில்லை என்றாலும், டாஸ் வென்றால் முதலில் பந்துவீசவே தாங்கள் திட்டமிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார். கடந்த 12 ஓடிஐ போட்டிகளாக இந்தியா டாஸை தோற்று வருகிறது.
நாளைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. சுப்மன் கில் ராசிக்காவது இந்தியா டாஸை வெல்லுமா என பார்க்கலாம். ரோஹித்துக்கு பதில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவிற்கு பதில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். நியூசிலாந்து அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
IND vs NZ: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து அணி: வில் யங், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் ஓ ரூர்க், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன்