திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மாலை தனியார் மருத்துவமனைக்குச் சென்று குளுக்கோஸ் போட்டுள்ளார்.

ஃபுட் பாய்சன் ஆகியுள்ளதால் 2 நாள்களுக்குத் தொந்தரவு இருக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் ஆகியும் கார்த்திகா பசியின்மை, வயிற்றுவலி, அல்சர் போன்ற தொந்தரவுகளால் உடல்நல பாதிப்புடனே இருந்து வந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக கார்த்திகா தரப்பிலிருந்து, கே.எஃப்.சி நிறுவனத்துக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி 15 நாள்கள் ஆகியும், நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், ஜூலை 17-ம் தேதி கோவை நுகர்வோர் ஆணையத்தில் கார்த்திகா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த வியாழனன்று நுகர்வோர் ஆணையம், `மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ. 5,000, புகார் செலவு ரூ. 5,000 ரூபாய் என மொத்தம் ரூ. 10,000 ரூபாயைப் புகார்தாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும்’ என கே.எஃபி.சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்திருக்கிறது.
இது குறித்து கார்த்திகாவை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, “ரொம்ப நாளா ஒரு பிசினஸ் பிளான் பண்ணி, அது மே-7 அன்னிக்குத் திறக்க இருந்தோம். அதைக் கொண்டாடத்தான் முதல் நாள் சாயங்காலம் கே.எஃப்.சி போனோம். அதுவே பிரச்னையாகி பிசினஸ் நிறுத்துற அளவுக்குப் போயிடுச்சு. உடனே கிளம்பி என் சொந்த ஊருக்கே போயிட்டேன். கேஸ் கொடுக்குற எண்ணம் எல்லாம் இல்லை. 25 நாள் ஆகியும் சரி ஆகாம இருந்துச்சு. அதுக்கு அப்புறம்தான் கேஸ் கொடுத்தேன்.” என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அவரின் வழக்கறிஞர் வழக்கறிஞர் ரஞ்சிதா, “எல்லா வழக்குகளுக்கும் லீகல் நோட்டீஸ் தான் ஆரம்ப நிலை, நோட்டீஸ்க்கு பதிலளிச்சா பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண பார்ப்போம். பதில் வரலண்ணு ஆனதுக்கு அப்புறம் தான் வழக்குத் தொடர்ந்தோம். எங்கக் கிட்ட இருந்த ஸ்ட்ராங் ஆன ஆதாரம் மருத்துவர் தந்த அப்சர்வேஷன் (OBSERVATION) ரிப்போர்ட். அதுல ஃபுட் பாய்சன் ஆனதற்கான அறிகுறிகள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தாங்க. கூடவே இது மாதிரி நடந்த பிற நிகழ்வுகளையும் குறிப்பிட்டு வாதாடினோம். இதையெல்லாம் வச்சுதான் நீதிமன்றம் தீர்ப்புத் தந்தாங்க. வேற யாருக்கும் அடுத்து இப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் வழக்குத் தொடர்ந்தோம்” என்றார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel