ஒப்பந்தத்தில் கையெழுத்திட…
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் கருதுவதாக தெரிகிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிக ஒப்பந்தம் செய்யவும், நட்பு பாராட்டவும் நினைக்கிறார். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தொடங்கிய விவாதம்…
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் ஆகியோருக்கு மத்தியில் வாக்குவாதம் நடந்தது. இந்த விவகாரம் உலகளவில் கவனிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான வெளியான வீடியோவில், ட்ரம்ப் கடுமையான குரலில், “நீங்கள் இதில் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் வெளியேறிவிடுகிறோம். நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள்… நீங்கள் இதில் வெற்றி பெறவில்லை” என்கிறார்.
முற்றிய வாக்குவாதம்…
இதற்கு அதே கடுமையான குரலில் பதிலளிக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் பலமாகதான் இருந்தோம். நாங்கள் உங்களுக்கு, உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தோம்” என பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “இது இப்படியே சென்றால் விஷயங்களை சிக்கலாக்கும் என்று பயப்படுகிறேன். நீங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போரை வைத்து விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதை” என்றார்.

குரலை உயர்த்திய ஜெலன்ஸ்கி…
இதற்கிடையில் அமெரிக்க துணை அதிபரும் சப்தமாக பேசினார். இருவரையும் பார்த்து ஜெலன்ஸ்கி உறுதியான குரலில், “சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்…” என்றார். இடைமறித்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஜெலன்ஸ்கியிடம் “போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரம் தேவை” என்றார். அடுத்த விநாடியே “என்ன வகையான ராஜதந்திரம் தேவை?” எனக் கேள்வி எழுப்பினார் ஜெலன்ஸ்கி. அப்போது வான்ஸ், “அமெரிக்க அதிபர் அலுவலகத்தை அவமரியாதை செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டார்.
நன்றியை எதிர்பார்க்கும் ட்ரம்ப்…
அப்போது பேசிய ட்ரம்ப், “நாங்கள் உங்களுக்கு $350 பில்லியன் டாலர் கொடுத்துள்ளோம். உங்களுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கினோம். நிறைய ஆதரவையும் வழங்கினோம். உங்களிடம் எங்கள் இராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்த போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்” என்றார். அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “ஆம்.. இதையே தான் புதினும் கூறினார்” என ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதின் குரலில் பேசுவதாக சுட்டிக்காட்டினார். சில விநாடிக்குப் பிறகு ட்ரம்ப், “இதுபோன்ற சூழலில் நமக்குள் வியாபாரம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

சமாதான முயற்சியில் வான்ஸ்…
கனிமவள ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றால், ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு, அமைதிப் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இல்லாமல் போகும் என்ற அச்சம் இருக்கிறது. இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் வான்ஸ், “நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் இந்த மனநிலையில் இருக்கும்போது அமெரிக்க ஊடகங்கள் முன் வாக்குவாதம் செய்வதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை விவாதிப்போம். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என ஜெலன்ஸ்கி குறித்துப் பேசினார்.
போர் நிறுத்தம் வேண்டும்…
உடனே ட்ரம்ப், “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது அமெரிக்க மக்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். அதனால்தான் இதை இவ்வளவு நேரம் பேசினேன். நாங்கள் செய்த அனைத்து உதவிக்கும், நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். உங்களிடம் தனியாகப் போரிட எந்த முகாந்திரமும் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், உங்களிடம் ராணுவ வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ‘எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்’ என்று கூறுகிறீர்கள். இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் இப்போதே போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.

நான் இப்போது இங்கே இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம்… எனக்கு போர் நிறுத்தம் வேண்டும். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை,” என்று குற்றம்சாட்டும் தொனியில் கூறினார். இதற்கும் விடாமல் பதிலளித்த ஜெலன்ஸ்கி, “உங்களுக்கு முன்னால் இருந்தவர்களிடம் போர் நிறுத்தம் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்” என்றார்.
ஜெலன்ஸ்கியின் பதிலடி…
அதற்கு ட்ரம்ப், “அது பைடன் என்ற நபரின் முடிவு. அவர் என்ன அவ்வளவு புத்திசாலியா..?” என்றார். உடனே ஜெலன்ஸ்கி, “ஆனால் அவர்தானே உங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர்” எனக் கூச்சலிட்டார். சற்று அதிர்ச்சியடைந்த ட்ரம்ப், “நான் உங்களுக்கு ஈட்டிகளை (மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு டாங்கி எதிர்ப்பு அமைப்பு) கொடுத்தேன். ஒபாமா உங்களுக்கு (உடல்களை மறைக்க) கேடயங்களை வழங்கினார். உண்மையில் உதவிய நபருக்கு நீங்கள் மிகவும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்.

நான் உங்களிடம் மிகவும் நேர்மையாகச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இல்லாமல், உங்களிடம் எந்த உபகரணங்களும் இல்லை.” என்றார். அப்போதே அரங்குக்குள் சலசலப்பு ஏற்பட்டதால் விவாதம் தொடரவில்லை.
இந்த விவாததுக்குப் பிறகு ட்ரம்ப், “அமெரிக்காவின் அமைதி முயற்சிக்குப் பிறகு, ஜெலென்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்று நான் தீர்மானித்துள்ளேன்” என சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
