புதுடெல்லி: அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதிடுகையில், “இந்தக் குழந்தைகள் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையர் வழங்கியுள்ள அட்டைகள் வைத்துள்ளனர். இவர்கள் ஆதார் அட்டை பெற முடியாது. ஆதார் இல்லை என்பதால் அரசுப் பள்ளிகளில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “இக்குழந்தைகள் முதலில் அரசுப் பள்ளிகளை அணுக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்” என்று தெரிவித்தனர்.
மேலும் இதற்குமுன் ரோஹிங்கியா குழந்தைகளுக்காக தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் இதே உத்தரவை தாங்கள் பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பட்டனர்.
அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் ரோஹிங்கியா அகதிகளின் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, “கல்வி வழங்குவதில் எந்தக் குழந்தைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது” என உத்தரவிட்டது.