லண்டன்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக கடந்த 2021ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் காயம் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறார் எனபதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சரை சரியாக பயன்படுத்துவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சு வரிசையில் அவர் இணைந்தால் அணியின் வலிமை மேலும் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.