புதுடெல்லி,
குஜராத்தின் தஹோத் நகரில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு சென்ற மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆலையில் நடந்து வரும் உற்பத்தி சார்ந்த பணிகளை பார்வையிட்டார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 89 சதவீத உப பொருட்களை கொண்டு ரெயில் என்ஜின் உருவாகி வருகிறது. குஜராத்தில் முதன்முறையாக இந்த வசதி சாத்தியப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்புகளாக இந்த என்ஜின்கள் இருப்பதற்காக நம்முடைய என்ஜினீயர்களும் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
இவ்வகை என்ஜின்களுக்கு ஏற்றுமதி முக்கியத்துவம் சார்ந்த வாய்ப்பும் உள்ளது. முதல் என்ஜின் இன்னும் 30 முதல் 40 நாட்களில் பயன்பாட்டுக்கு தயாராகி விடும். சரக்கு ரெயில்களின் வேகம் மேம்பட வேண்டும் என்பதே ரெயில்வே துறையில் முக்கிய கருத்துருவாக உள்ளது என கூறினார்.
இந்நிலையில், ரெயில்வே அதிகாரி ஒருவர் இன்று கூறும்போது, 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் தஹோத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் கண்காணிப்பு சாதனம், கவச உபகரணம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இந்த என்ஜின் உருவாகி வருகிறது.
இதனால் இந்திய ரெயில்வேக்கு இன்னும் ஒரு மாதத்தில் அதி நவீன, சக்தி வாய்ந்த என்ஜின் கிடைக்க உள்ளது. இது 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் டன் எடை கொண்ட சரக்கு ரெயிலை இழுத்து செல்லும் திறன் கொண்டிருக்கும். அதனுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆற்றலும் கொண்டு இருக்கும். இதனால், சரக்குகளை கையாள்வது என்பது எளிமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவாக சரக்குகளை அனுப்பும்போது, அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்.