சென்னை: இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை காரணம் காட்டி அவர் பாதுகாப்புப் பெற்றதாகவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி தவெக தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் வன்னியரசுக்கு தவெக சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தவெகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்கள் பலருக்குப் பரிசளித்துப் தவெக தலைவர் விஜய் பாராட்டியுள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்.
தவெக தலைவரை இழிவுபடுத்தும் நோக்கில் நீங்கள் பேசியுள்ள அப்பட்டமான பொய்யின் வாயிலாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் ஏதோ தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் போலச் சித்திரித்து அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யினைச் சர்வ சாதாரணமாகப் பேசும் நீங்கள், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவப்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர். இனி வரும் காலங்களில் இது போன்று அநாகரிகமான முறையில் இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, நாகரிக அரசியல் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.