டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலில் ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டது. இதனால், இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது. தொடர்ந்து, கடைசி நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
கடைசி பணியாளரின் உடலும் மீட்பு: இந்நிலையில் உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி தேடப்பட்டு வந்த கடைசிப் பணியாளரின் உடலும் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதன்படி பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டேராடூன் (ராணுவம்) மக்கள் தொடர்பு அதிகாரி மீட்புப் பணிகளின் லெப்டினட் கர்னல் மணிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டு விட்டது. மனா கிராமத்தில் சிக்கிய 54 பேரும் மீட்கப்பட்டுவிட்டனர்.” என்றார்.
இந்த மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம், ஐடிபிபி, விமானப்படை, என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் ஆகியோர் கூட்டாக ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,