திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக வனப்பகுதியில் சில இடங்களில் தீபற்றியும் எரிந்தது. கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியது என்று எண்ணிய நிலையில், கடந்த இருதினங்களாக மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்யத்துவங்கி குளுமையான சூழல் நிலவியது.
இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது, இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் ஏற்பட்டது. சாரல் மழையில் நனைந்துகொண்டே சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர், படகுசவாரி செய்தனர். தூண்பாறை, குணா குகை, பைன்மரக்காடுகள், மோயர் பாய்ண்ட், பிரையண்ட் பூங்கா ஆகிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். மேகக் கூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை தழுவிச்சென்றதை ரசித்தனர்.

கொடைக்கானலில் பகலில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. கடந்த வாரம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில், கடந்த இருதினங்களாக பெய்த சாரல் மழையில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.