லாகூர்,
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து ஒரு புள்ளியும் பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் இங்கிலாந்து கேப்டன் (கேப்டனாக பட்லருக்கு கடைசி போட்டி) ஜாஸ் பட்லர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கும் செயல்திறன், இன்று நாங்கள் எங்கள் இலக்கை அடையவில்லை, மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது பேட்டிங் செய்ய ஏதுவான மைதானம். ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் டக்கெட் எங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார், ஆனால், அதை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், ஒரு முழு குழுவாக, எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை. அது எங்களிடமிருந்து நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. எங்கள் வீரர்களிடம் திறமை உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எங்களால் ஒரு சிறந்த அணியை ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக வீரர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம்.
நான் ஒரு உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பது பெருமையாக உள்ளது. மேலும், அதுதான் எனது கேப்டன் பதவிக்காலத்தில் என்னுடைய சிறந்த நாளாகவும் இருந்தது. ஜோ ரூட் எனக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். ஏனெனில், அவரும் தனது கேப்டன் பதவியை துறந்த பிறகு, அற்புதமாக விளையாடியுள்ளார். அதனால் நானும் அவரைப் பின்பற்றுவதுடன், அவரைப் போல சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.