ஹதராபாத்: தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டனர். அவர்களின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது ரேடார் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்தில் எஸ் எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த வாரம் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை, காவல் துறை என 9 படைகளின் வீரர்கள் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.
சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்க ரேடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 13.85 கி.மீ. தூரம் வரை உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு வரை 13.61 கி.மீ. தொலைவை மீட்புப் படை வீரர்கள் அடைந்தனர். வழி நெடுகிலும் சேறும் சகதியுமாக இருந்தது. தற்போது ஐந்தரை அடி உயரத்தில் சேறு நிறைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன. தண்ணீரை ஒருபுறம் வெளியேற்றினாலும், மறுபுறம் சுரங்கத்துக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், கட்டர்கள் கொண்டு சுரங்கத்தில் பைப்புகளை அகற்றி மீட்புப் பணிகள் தொடர்ந்தன. ரேடார் கருவி மூலம் நேற்று ஸ்கேன் செய்ததில் ஓர் இடத்தில் 4 தொழிலாளர்கள் சேற்றில் புதைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஸ்கேன் செய்ததில் சற்று தொலைவில் மேலும் 4 பேர் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தெலங்கானா அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் தலைமை செயலர் சாந்திகுமாரி ஆகியோர் சம்பவ இடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுரங்க விபத்து நடந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்கட்சியினர் இதனை தவறாக சித்தரித்து வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமைக்குள் 4 பேரின் சடலங்கள் மீட்கப்படும். மீதியுள்ள நால்வரின் சடலங்கள் சற்று தாமதமாக மீட்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்க வாயிலில் காத்திருக்கின்றனர். அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.