சூரத்: குஜராத்தின் சூரத் நகர் ஜவுளி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.850 மதிப்பு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. 20 கோடி ரூபாய் நோட்டுகளும் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன.
கடந்த 1996-ம் ஆண்டில் குஜராத்தின் சூரத் நகரின் ரிங் சாலையில் பூபத் படேல், அருண் படேல் ஆகியோர் 6 மாடி கட்டிடத்தை கட்டினர். இந்த கட்டிடத்தில் 822 கடைகள் செயல்பட்டன. இது சிவசக்தி ஜவுளி சந்தை என்று அழைக்கப்பட்டது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இந்த சந்தைக்கு மொத்த வியாபாரிகள் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர்.
கடந்த 26-ம் தேதி காலை 7 மணி அளவில் சிவசக்தி ஜவுளி சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தீ மளமளவென்று பரவியதை பார்த்து வியாபாரிகள் கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு 60 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. அனைத்து கடைகளிலும் துணி வகைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால் தீ கட்டுக்கடங்காமல் பரவியது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக தீயை அணைக்க போராடினர். இரு நாட்களுக்குப் பிறகே தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 700 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. அந்த கடைகளில் சுமார் ரூ.8,50 கோடி மதிப்பிலான துணி வகைகள் இருந்தன. அவை முழுமையாக எரிந்துவிட்டன. இதேபோல அங்குள்ள ஜவுளி கடைகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக ரொக்க பணம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளும் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: எங்களது ஜவுளி சந்தையில் கடந்த 25-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு லேசான தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 25 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது 15 கடைகள் மட்டுமே சேதமடைந்தன. ஒரு ஜவுளி கடையில் தங்கியிருந்த மகேந்திர குமார் ஜெயின் என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டோம்.
கடந்த 26-ம் தேதி காலை 7 மணி அளவில் எங்களது ஜவுளி சந்தையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. பெரும்பாலான துணி வகைகள் பாலிஸ்டர்-சிந்தடிக் வகையை சேர்ந்த சேலைகள் என்பதால் தீ மளமளவென்று பரவியது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தடயவியல் ஆய்வு நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர். பெரும்பாலான வியாபாரிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். நாங்கள் சுமார் 25 ஆண்டுகள் உழைப்பில் ஜவுளி சந்தையை கட்டி எழுப்பினோம். ஒரே நாளில் ஒட்டுமொத்த சொத்துகளையும் இழந்துவிட்டோம். பெரும்பாலான வியாபாரிகள் காப்பீடு செய்யவில்லை. எங்களது இழப்பை குஜராத் அரசு ஈடுகட்ட வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரத் மேயர் தாகேஷ் மேவானி கூறியதாவது: கடந்த 25-ம் தேதி அதிகாலை ஜவுளி சந்தையின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளில் ஜவுளி சந்தையின் 3-வது, 4-வது தளங்களில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. காப்பீடு தொகையை பெறுவதற்காக சில வியாபாரிகள் திட்டமிட்டு தீ வைத்து இருக்கக்கூடும் என்று சந்தேக்கிறோம். அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சூரத் மேயர் தாகேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.