சண்டிகார்,
அரியானா மாநிலம் ஹிசாரில் ஒரு பெண், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சொத்துக்காக அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்தப் பெண், தன் தாயின் தலைமுடியை இழுத்து அடிக்கிறார். மகளின் தாக்குதலில் தாய் வலியால் துடித்து கதறுகிறார். தன்னை விட்டு விடுமாறு பெற்ற மகளிடம் தாய் கைகளைக் கூப்பி கெஞ்சியும், அந்த பெண் விடுவதாக இல்லை. நீ எத்தனை நாள் வாழ்வாய்? என்று ஏளனமாக பேசிக்கொண்டே மகள் மீண்டும் துன்புறுத்துகிறார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண் மீது, அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், எனது சகோதரியான ரீட்டாவுக்கு சில வருடங்களுக்கு திருமணமான நிலையில், கணவனை பிரிந்து மீண்டும் எனது தாயுடன் வசித்து வருவதாகவும், தற்போது குடும்பத்தில் பெயரில் உள்ள வீட்டை ‘என் பெயருக்கு எழுதி வை’ என்று சொல்லி தனது தாயை ரீட்டா அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ரீட்டாவால் தனது தாய் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரீட்டாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தனது தாய் என்றும் பாராமல் ஒரு பெண் அடித்து துண்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.