மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குக்கி இனத்தவர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. அது இன்று வரை தொடர்கிறது. இந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு முதல்வராக இருந்த பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி நேற்று அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது மணப்பூர் மாநில சாலைகளில் இடையூறுகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவரிடம் விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது. மாநிலத்தில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினர், போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், துணை ராணுவப் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மணிப்பூரின் முதல்வராக இருந்த என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்ரவரி 13-ல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரண்: இதனிடையே சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் போராட்டக் குழுவினர் அனைவரும் சரணடைய வேண்டும் என்று ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த பிப்ரவரி 20-ம் தேதி வரை காலக்கெடு விதித்தார்.
இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலுள்ள பள்ளத்தாக்கு மாவட்டங்களில் கடந்த 7 நாளில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். இதில் மைதேயி தீவிரவாதக் குழுவான அரம்பாய் தெங்கோல் பிரிவினர் சார்பில் 246 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து, மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் சமர்ப்பிக்க மக்கள் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, மார்ச் 6-ம் தேதி மாலை 4 மணி வரை இந்த அவகாசத்தை ஆளுநர் நீட்டித்துள்ளார்.
650 ஆயுதங்கள்: இந்நிலையில் நேற்று வரை 650 ஆயுதங்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சரண் அடைய வரும் போராட்டக் குழுவினர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம். நேற்று வரை 650 ஆயுதங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்றார்.