மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

ராமேசுவரம்: மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ராமேசுவரம் செம்மமடம் பகுதியில் மனோலயா மனநல காப்பகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை மாவட்டஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரும் வழியில், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். ஆளுநரை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

மீனவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு, அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்கள், தண்டனை அனுபவித்து வரும் மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், என கோரிக்கைகளை முன்வைத்தனர். காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ராமேசுவரத்துக்கு நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். 1974 ஆம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அரசுகள், கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன.

அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.