லாகூர்,
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து ஒரு புள்ளியும் பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் தென் ஆப்பிரிக்க பொறுப்பு கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டிக்கான மைதானம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தது. ஆனால், எங்கள் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர். நாங்கள் எங்கள் லென்த்களை தக்கவைத்துக்கொண்டு நல்ல வழிகளில் பந்து வீசினோம். மேலும், இப்போட்டியில் ஜான்சென் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் ஆரம்பத்திலேயே எங்களுக்காக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதை அவர் தொடர்ந்து செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார். மேலும், அவர் ரபாடாவுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார். அதேசமயம் கிளாசென் கடந்த சில மாதங்களில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அவரது பார்மும் கேள்விக்குள்ளானது. ஆனால், அவர் உண்மையில் எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.