கோழிக்கோடு,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கொலாப் உசைன்(வயது 20). இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள ஒரு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வீட்டு வேலைக்கு வந்த அசாமை சேர்ந்த 14 வயது சிறுமியை தன்னுடன் அழைத்து வந்து, செல்போனில் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து, அதனை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 23-ந்தேதி அவர், சிறுமியை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி அங்கிருந்து தப்பித்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த விஷயத்தை கூறினார். தொடர்ந்து இதுகுறித்து வெள்ளையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கொலாப் உசைனை கைது செய்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.