அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கரிசலாங்கண்ணி போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன. இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். இவற்றைத் தவிர்த்தும் கண்களை வசீகரப்படுத்த முடியாது. எனவே பாதுகாப்பாகக் கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரவிடம் பேசினோம். அவர் கொடுத்த அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக…

வெளியில் செல்லும்போது இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக் கொள்வோம். அதில் தவறில்லை. ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகக் குளிர்ந்த நீரில் கழுவி, தூய்மை செய்து விட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கலாம்.
இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளைச் சிறிதளவு மென்மையான பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும் நாம் செய்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணெய்யையும் மேக்-அப் ரிமூவராக பயன்படுத்தலாம். பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல் கண்களுக்குப் பயன்படுத்திய மையைக் கலைக்காமலேயே தூங்கும் போது கருவளையம், கண் தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
போதிய நேரம் தூங்காமலிருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்ணில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்களுக்குப் பயன்படுத்தும் மையைக் கலைக்காமலிருந்தாலும் கருவளையம் ஏற்படலாம்.
இதனை நீக்க சில எளிமையான வழிகளைக் கடைப்பிடித்தாலே போதும்.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்தியே கருவளையங்களை நீக்கலாம். இவற்றை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையம் உள்ள இடத்திலும் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். கருவளையங்கள் மறைந்துவிடும்.

கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனம் தேவை. விலை குறைவாக உள்ள தரம் இல்லாத எந்தவொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தக்கூடாது. கடைகளில் இவற்றை வாங்கும் போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றைக் கண்டிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய கண் மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
தினமும் செய்வதில் தவறில்லை. ஆனால் எப்போதும் அழியாமல் இருக்கும் வாட்டர் ஃபுரூப் கண் மை, மஸ்காரா போன்றவற்றைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவப்பு, வீக்கம் ஏற்படலாம். இதனால் தினமும் கண்களுக்கு மையிடுவதை ஓரளவு தவிர்க்கலாம்.

வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்துகின்றன.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel