சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி பவர்ப்ளே முடிவில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

டாஸை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்தான் வென்றிருந்தார். ஆனாலும் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்பதை தானுமே விரும்பியதாக ரோஹித் கூறினார். முதல் இரண்டு போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தோம். இந்தப் போட்டியில் எங்களை நாங்களே சவாலுக்குள் தள்ளிக்கொள்ள முதலில் பேட் செய்யவே விரும்பினோம் என ரோஹித் பேசியிருந்தார். அவர் பேசியதை போலவே முதல் பேட்டிங் என்பது இந்தியாவுக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது.
கில், ரோஹித், விராட் கோலி என இந்தியாவின் டாப் 3 வீரர்கள் மூவரும் பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகிவிட்டனர். ரோஹித் பவுண்டரி சிக்சர் என துடிப்பாக இன்னிங்ஸை ஆரம்பிக்க இன்னொரு பக்கம் கில் மேட் ஹென்றி வீசிய 3 வது ஓவரிலேயே இரண்டு ரன்களில் lbw முறையில் அவுட் ஆகிச் சென்றார்.
ரோஹித் மேலும் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கையில், ஜேமிசன் வீசிய 6 வது ஓவரில் அவுட் ஆனார். ஷார்ட்டாக வந்த பந்தை மடக்கி லெக் சைடில் பவுண்டரியாக்க முயன்றார். ஆனால், மிட் விக்கெட்டை க்ளியர் செய்ய முடியாமல் கேட்ச் ஆகி 11 ரன்களில் அவுட். மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரிலேயே கோலியும் அவுட். நல்ல லெந்த்தில் வந்த பந்தை பேக்வர்ட் பாய்ன்ட்டில் பவுண்டரியாக்க முயன்றார். ஆனால், க்ளென் பிலிப்ஸ் காற்றில் பறந்து அற்புதமாக கேட்ச்சை பிடித்தார். நல்ல ஷாட்டை ஆடியிம் பிலிப்ஸின் அபாரமான பீல்டிங்கால் கோலி 11 ரன்களில் அவுட் ஆனார். ‘இவரெல்லாம் சர்க்கஸில் இருந்திருக்க வேண்டிய நபர்.’ என வர்ணனையில் பிலிப்ஸை நகைச்சுவையாகப் பாராட்டினார் ரவி சாஸ்திரி.

பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அக்சர் படேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் இந்தியாவை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.