IPL 2025: வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன.
IPL 2025: ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணி
இதுஒருபுறம் இருக்க, மற்ற அனைத்து தொடர்களும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி மட்டுமே மீதம் இருக்கிறது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக், மகளிர் ஐபிஎல் தொடர்களும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை தொடரை 6 ஆண்டுகளுக்கு பிறகு விதர்பா அணி வென்றுள்ளது. அக்சய் வட்கர் தலைமையிலான விதர்பா அணி கடந்த ஆண்டே இறுதிப்போட்டி வரை வந்தும் கோப்பையை தவறவிட்டிருந்தது. ஆனால், இந்த முறை சிறப்பாக விளையாடி விதர்பா அணி 3வது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. 2017-18, 2018-19 ஆகிய இரண்டு சீசன்களில் இதற்கு விதர்பா அணி கோப்பையை வென்றிருந்தது.
IPL 2025: விதர்பாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் கருண் நாயர்
அதேபோல், விஜய் ஹசாரே தொடரிலும் (50 ஓவர்) விதர்பா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்தாண்டு விஜய் ஹசாரே தொடரிலும், கடந்த 2 சீசன்களில் ரஞ்சிக் கோப்பை தொடரிலும் விதர்பா அணி சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம், கருண் நாயர்தான். 2024-25 விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 8 இன்னிங்ஸில் 389.50 சராசரியில் 779 ரன்களை அடித்திருந்தார். மேலும், 2023-24 ரஞ்சி சீசனில் 690 ரன்களையும், 2024-25 ரஞ்சி சீசனில் 863 ரன்களையும் கருண் நாயர் அடித்திருந்தார். இறுதிப்போட்டியிலும் அசத்தலான சதத்தை அடித்தார்.
IPL 2025: இந்திய அணியில் எப்போது கருண் நாயர்?
33 வயதான கருண் நாயர் அவரது வாழ்வின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். எனவே இவரை இந்திய அணியில் உடனே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சாம்பியன்ஸ் டிராபிக்கே அவரை எடுப்பார்கள் என கூறப்பட்டாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நிச்சயம் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது உள்ளது.
IPL 2025: இதுவரை ஐபிஎல் தொடரில் கருண் நாயர்…
இந்நிலையில், கருண் நாயர் வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாடுகிறார் என்பது பலரும் எழுப்பும் கேள்வியாக உள்ளது. கருண் நாயர் இதுவரை ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். அவர் கடைசியாக விளையாடியது 2022 சீசனில்தான், கடந்த இரண்டு சீசன்களாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் 68 இன்னிங்ஸில் 1496 ரன்களை அடித்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 127.75 ஆக உள்ளது.
IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் கருண் நாயர்
ஐபிஎல் 2025 ஏலத்தில் கருண் நாயர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார். நிச்சயம் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் கருண் நாயர் ஒரு முக்கியமான வீரராக இருப்பார் எனலாம். கேஎல் ராகுல் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கிறார். ஃபிரசர் மெக்கர்க், பாப் டூ பிளெசிஸ், ஹாரி ப்ரூக், ஸ்டப்ஸ், அக்சர் பட்டேல், மிட்செல் ஸ்டார்க், நடராஜன், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார் என முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.