கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த காரசார விவாதத்தினால் உலகமே பரபரத்தது.
மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஷ்யா – உக்ரைன் போர் இன்னமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா – உக்ரைன் இடையில் கனிம வள ஒப்பந்தத்தை கையெழுத்திட அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் ஜெலன்ஸ்கி.
அங்கே அவருக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், “உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து ஜெலன்ஸ்கி விலகினால்தான் போர் முடிவடையும்… உக்ரைனுக்கும் நல்லது நடக்கும்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “லிண்ட்சே கிரஹாம் மிக நல்ல மனிதர். அவருக்கு என்னால் உக்ரைன் குடியுரிமை தர முடியும். அவர் உக்ரைன் குடிமகன் ஆனால், உக்ரைன் குறித்த அவருடைய கருத்து வலுப்பெறும். அவர் உக்ரைன் குடிமகன் ஆன பின்னர், உக்ரைன் பிரதமராக யார் இருக்கலாம் என்ற அவரின் கருத்தை கேட்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.