செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த மக்களை அனுமதிக்காததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை தடுக்க முயன்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வயலூர், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதியதாக அமையவுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடர்ந்து மனு அளிக்க வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில், அவர்களை காவலர்கள் வெளியே தடுத்து நிறுத்தினர். இதனால், ஆவேசமடைந்த மக்கள் காவலர்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றபோது, பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், வாசல் முன்பு அமர்ந்து தங்கள் அடையாள அட்டை ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை தரையில் போட்டு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நீதிமன்றம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: “செங்கல்பட்டு மாவட்டம் நெற்குணம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிகிறோம். இங்கு அனைவரின் பிரதான தொழில் விவசாயமாகும். சுமார் 2000 ஏக்கர் நில பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விவசாய பணியில் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் கிராம மக்கள் அனவைரும் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது நெற்குணம் பஞ்சாயத்துக்குட்பட்ட வயலூர் கிராமத்திலும் அதனை ஒட்டியுள்ள புளியணி மற்றும் தூதுவிளம்பட்டு ஆகிய கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அறவை செய்யும் இயந்திரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராம பொது மக்களின் கருத்து மற்றும் ஆட்சேபனைகளை கேட்காமல் அரசு துறைகளின் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்துள்ளனர்.
மேற்படி கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அறவை செய்யும் இயந்திரங்கள் அமைத்தால் வயலூர், நெற்குணம், புளியணி, தூதுவிளம்பட்டு, புத்தமங்கலம், சிறுவிளம்பாக்கம் போன்ற கிராம மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் கல்குவாரி அமைப்பதனால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, “கல்குவாரி அமைப்பதனால் சுற்றுச்சூழல், ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படும். கல் அறவை செய்யும் இயந்திரம் அமைப்பதினால் அதிலிருந்து வரும் கிரிஷர் பவுடரினால் காற்று மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் போகும். மக்கள் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும். எனவே, அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.