லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் அனைத்து முடிவுகளையும் மதிப்பதாக, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மேலும், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுவதாக மாயாவதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். அதோடு, தம்பி ஆனந்த் குமாரையும் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி கவுதமையும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயாவதி அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் நீக்கப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் ஆனந்த், “நான் மிகவும் மதிக்கும் எனது தலைவர் மாயாவதியின் ஒரு பணியாளர் நான். அவரது தலைமையின் கீழ் தியாகம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மறக்க முடியாத பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். மாயாவதி என்ன கூறினாரோ அவை அனைத்தும் எனக்கு கல்லில் எழுதப்பட்ட வரிகளைப் போன்றது. நான் அவருடைய ஒவ்வொரு முடிவையும் மதிக்கிறேன். அந்த முடிவில் உறுதியாக நிற்கிறேன்.
கட்சிப் பதவிகளில் இருந்து என்னை நீக்குவது என்ற மாயாவதியின் முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்ச்சிப்பூர்வமானது. அதே நேரத்தில் அது பெரிய சவாலாக, கடினமான சோதனையாக, நீண்ட போராட்டமாக கருதுகிறேன். இத்தகைய கடினமான காலங்களில், பொறுமையும் உறுதியுமே உண்மையான தோழர்கள். கட்சியின் உண்மையான தொண்டனாக கட்சிக்காகவும், அதன் நோக்கங்களுக்காகவும் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன். எனது கடைசி மூச்சு வரை எனது சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவேன்.
கட்சியின் இந்த முடிவால் எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகுஜன் இயக்கம் என்பது ஒரு தொழில் அல்ல, மாறாக கோடிக்கணக்கான தலித்துகள், சுரண்டப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்களின் சுயமரியாதைக்கான போராட்டம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பகுஜன் சமாஜ் என்பது ஒரு சிந்தனை, ஒரு இயக்கம். இதை அடக்க முடியாது. லட்சக்கணக்கான ஆகாஷ் ஆனந்த்துகள் இந்த ஜோதியை எரிய வைக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள், அதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.