திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவின் போது அன்னதானம் வழங்குவதற்கு சமையல் செய்வதை காவல் துறை தடுத்ததைக் கண்டித்து அய்யாவழி பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியபோது போலீஸாருககும், அய்யாவழி பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் திருக்கோயில் ஒருசேர அமைந்துள்ளன. இந்த கோயில்களில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்து வருகிறது. நீதிமன்றம் வரை சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டு விழாக்கள் நடந்து வருகிறது. இங்குள்ள கோயில்களில் வழிபாடுகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இச்சூழலில் அய்யா அவதார தினவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அய்யா கோயில் பக்தர்கள் மேற்கொண்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, கோயிலில் அன்னதானம் வழங்கக் கூடாது என்று போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்நிலையில், போலீஸாரின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து நேற்று இரவில் அய்யாவழி கோயிலில் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் காவல் உதவி ஆணையர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் உள்ளிட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அன்னதானம் வழங்க கூடாது என்று தெரிவித்து போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையை மீறி அய்யா வைகுண்டர் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவதற்காக இன்று காலையில் சமையல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இது குறித்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சமையல் பாத்திரங்களை அப்புறப்படுத்தினர். அப்போது பக்தர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸார் தாக்கியதாக தெரிவித்து வழக்கறிஞர் கார்த்திக் தம்பான் உள்ளிட்ட 2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்நிலையில், போலீஸாரின் கெடுபிடிகளை கண்டித்து அய்யாவழி பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலை கைவிடுமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் கைவிடப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல் துறை விளக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட விளக்கம்: “திருநெல்வேலி மாநகர காவல்துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வராத சொக்கலிங்கசாமி கோயில் தெருவில் அய்யா வைகுண்டர் தர்மபதி கோயில் அமைந்துள்ளது. இந்த தர்மபதி கோயில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை இருதரப்பும் ஏற்று எழுத்து பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர். இந்நிலையில் உரிமையியல் பிரச்சினை உள்ள இடத்தில் நீதிமன்றத்தை அணுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் உள்நுழைந்து அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இதை முறையாக பாளையங்கோட்டை காவல்துறையினர் தடுத்து உரிய சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை கண்ணியமாகவும், நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்கிறார்கள்.
ஆனால், சமூக வலைதளங்களில் காவல் துறை அராஜகம் எனவும், அன்னதானம் நிறுத்தப்பட்டதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பானது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.