மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு வாங்க வழங்கப்பட்ட நிதியில் மோசடி நடைபெற்ற வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஆதிதிராவிட நலத்துறையின் விடுதிகளில் தங்கிப் பயிலும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.100, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அந்த மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கப்படுகிறது. இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்துக்கு 2017 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநருக்கு கடந்த 2023-ல் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ரூ.9 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பதும், அதில் ரூ.5 லட்சம் திரும்பப் பெறப்பட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஆனந்த், மகேஸ்வரி, காசி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
ஏழை மாணவர்களின் அடிப்படை தேவைக்காக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த அலுவலர்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்த வழக்கை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அலுவலரை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக ஆதிதிராவிட நலத் துறையின் செயலர், இயக்குனர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.