ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த இக்குழந்தை, சூடு வைக்கப்பட்ட பிறகு அதன் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து உமர்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்தக் குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பத்து நாட்களுக்கு முன்பு அந்தக் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதற்கு ஏதோ தீய சக்திதான் காரணம் என்று குடும்பத்தினர் நம்பினர்.
மருத்துவ உதவியை நாடுவதற்கு பதிலாக, குழந்தையின் வயிறு மற்றும் தலையில் சூடான உலோக கம்பியால் 30 முதல் 40 முறை சூடு வைத்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஒடிசாவின் தொலைதூரப் பகுதிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கை இப்போதும் இருந்து வருகிறது. எனவே அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.